Kolkata Knight Riders 158 for 4  beat Royal Challengers Bangalore 158 for 6  by six wickets

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஆட்டத்தில் தொடக்க வீரர்கள் சுனில் நரைன் – கிறிஸ் லின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று 2வது இடத்துக்கு முன்னேறியது.
எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசியது. ஆர்சிபி தொடக்க வீரர்களாக கிறிஸ் கேல், மன்தீப் சிங் களமிறங்கினர். உமேஷ் வீசிய முதல் பந்திலேயே கிறிஸ் கேல் டக் அவுட்டாகி வெளியேற ஆர்சிபி அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அதில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே கேப்டன் விராத் கோஹ்லி 5 ரன், டி வில்லியர்ஸ் 10 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, அந்த அணி 4.4 ஓவரில் 34 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில் மன்தீப் – டிராவிஸ் ஹெட் ஜோடி 4வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடி 71 ரன் சேர்த்தது. மன்தீப் 52 ரன் எடுத்து (43 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்க, கேதார் 8, நேகி 5 ரன்னில் பெவிலியன் திரும்பினர். 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்தது. ஹெட் 75 ரன் (47 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), அரவிந்த் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் உமேஷ் 3, நரைன் 2, வோக்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 20 ஓவரில் 159 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நைட் ரைடர்ஸ் களமிறங்கியது. கிறிஸ் லின், நரைன் இருவரும் துரத்தலை தொடங்கினர். இருவரும் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட கொல்கத்தா 3.3 ஓவரிலேயே 50 ரன் எட்டியது. ருத்ரதாண்டவமாடிய நரைன் 15 பந்தில் அரை சதம் அடித்து, ஐபிஎல் வரலாற்றில் ‘அதிவேக 50’ சாதனையை படைத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6 ஓவரில் 105 ரன் சேர்த்து பவர்பிளேயில் அதிக ரன் குவிப்பு சாதனையையும் நிகழ்த்தியது. நரைன் 54 ரன் (17 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), கிறிஸ் லின் 50 ரன் (22 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), கிராண்ட்ஹோம் 31 ரன் (28 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), கம்பீர் 14 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கொல்கத்தா அணி 15.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து எளிதாக வென்றது.