பெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், 3 போட்டிகளிலுமே இந்திய கேப்டன் விராத் கோலி டாஸ் தோற்றுள்ளார்.
முதல் போட்டியில் டாஸ் தோற்று இந்திய அணி பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியால் சோபிக்க முடியாமல் 255 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
அப்போட்டியில், பேட்டிங்தான் எதிர்பார்த்தது போன்று அமையவில்லை என்றால், பந்துவீச்சு படுமோசம். ஆஸ்திரேலியாவின் ஒரு விக்கெட்டைக்கூட எடுக்க முடியாமல், அந்த அணியின் 2 துவக்க வீரர்களே சதங்கள் அடித்து ஆட்டத்தை முடித்துவிட்டு சென்றுவிட்டனர்.
ஆனால், இரண்டாவது போட்டியில் டாஸ் தோற்று, மீண்டும் முதலில் களமிறங்கும் நிலை வந்தபோது, இந்திய அணியின் மனநிலை வேறாக இருந்தது. கடைசி நேரத்தில் ராகுல் பட்டையைக் கிளப்ப, ஆஸ்திரேலியா எதிர்பாராத வகையில் 340 ரன்களை அடித்து நொறுக்கிவிட்டது இந்தியா.
அதை சேஸ் செய்ய முடியாமல் தோற்றுப்போனது ஆஸ்திரேலியா. பின்னர், தற்போது மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற நிலையில், நேற்றைய முதல்நாள் போட்டி நினைவுக்கு வந்திருக்கும் போலும்!
தானே முதலில் களமிறங்கி, முந்தையப் போட்டியில் இந்தியா செய்ததைப் போல் செய்ய நினைத்தது. ஆனால், இந்திய பவுலர்கள் இந்தமுறையும் சுதாரிப்பாக இருந்துவிட்டதால், 286 ரன்கள் மட்டுமே கிடைத்தது அந்த அணிக்கு!
பும்ரா கலக்கல்!
பந்துவீச்சைப் பொறுத்தவரை, இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் பும்ராவின் பந்துவீச்சு மெச்சும்படியாக இருக்கிறது. இரண்டாவது போட்டியில் மொத்தம் 9.1 ஓவர்கள் வீசிய பும்ரா, 2 மெயிடன்களை வீசி, ஒரு விக்கெட்டைக் கைப்பற்றி, விட்டுக்கொடுத்த ரன்கள் 32 மட்டுமே.
இந்த மூன்றாவது போட்டியில், மொத்தம் 10 ஓவர்கள் வீசிய நிலையில், விக்கெட் எதையும் கைப்பற்றாமல் போனாலும், மொத்தமாக 38 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக சிறப்பாக பந்து வீசியிருப்பவர் ஆல்ரவுண்டர் ஜடேஜா. இந்த இருவரின் கட்டுக்கோப்பால், பிற பவுலர்களுக்கு சுமை குறைந்தது என்றால் அதில் மிகையில்லை!
மூன்று போட்டிகளிலும் டாஸ் தோற்றாலும், தொடரை வென்றுவிட்டால், விராத் கோலிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லைதான்!