சென்னை:
கொடநாடு விவகாரம் தொடர்பாக, ஆவணப்படம் வெளியிட்ட மேத்யூ சாமுவேல், இது சம்பந்தமாக முதல்வர் குறித்து பேச சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தடை மேலும் 4 வாரங்க ளுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மறைவுக்கு பிறகு அவரது கொடநாடு எஸ்டேடில், கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. இது தொடர்பாக 5 பேர் மர்மமான முறையில் இறந்துள்ள நிலையில், இதுகுறித்து பரபரப்பு தகவல் களை திரட்டி, ஆவணப்படமாக வெளியிட்டார் முன்னாள் தெகல்ஹா பத்திரிகை ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல்.
அதில், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மேத்யூஸ் சாமுவேல் மீது வழக்கு தொடர்ந்தது. மேலும் அவர் மீது அ.தி.மு.க ஐடி பிரிவு நிர்வாகி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்குப்பதிவு செய்து உள்ளார்.
இந்த வழக்கில், கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் குறித்து பேச மேத்யூ சாமுவேலுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, எதிர் மனுதாரர் சயானுக்கு நீதிமன்றத்தின் நோட்டீஸ் சென்றடைய வில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தார் நீதிபதி கல்யாணசுந்தரம்.
இதன் காரணமாக கொடநாடு விவகாரத்தில் முதல்வர் குறித்து பேச மேத்யூ சாமுவேலுக்கு மேலும் 4 வாரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது.