கோவை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கோரி, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரின் முதன்மைப் பாதுகாப்பு அதிகாரியான வீரபெருமாளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுத் தொடர்ந்து, கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி அவருக்கு சொந்தமான, நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கொடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளை சம்பவம் அரங்கேறியது. நள்ளிரவில் அங்கு வந்த ஒரு கும்பல், அங்கு பணியில் இருந்த காவலாளி, ஓம் பஹதூர் என்பவரை கொலை செய்துவிட்டு, அங்குள்ள பங்களாவுக்குள் புகுந்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அருகே உள்ள சோலுர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு, இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த வழக்ககை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி, விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே ஏராளமானோரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 250-க்கும் மேற்பட்டவா்களுக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தியுள்ளனா். நேற்று கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, இந்த சம்பவத்தின்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியான வீரபெருமாளை மார்ச் 11 ஆம் தேதி நேரில் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த கொலை செள்ளை சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பிரிவு ஆய்வாளராக இருந்த கனகராஜ் என்பவர், விபத்தில் பலியான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து அப்போதைய உயர் அதிகாரியாக இருந்த வீரபெருமாளிடம் சிபிசிஐடி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.