நீலகிரி,

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொள்ளை வழக்கில் கைதானவர்களில் 5 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க நீலகிரி ஆட்சியர் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின்  கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியைக் கொன்று கொள்ளை அடித்த வழக்கில் இதுவரை  10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் தீபு, சதீஷன், மனோஜ், ஜிஜின் ஆகிய 5 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு பங்களாவில், கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. அப்போது அங்கு காவல்‘பணியில் இருந்த ஓம் பகதூர் என்பவர் கொலை செய்யபட்டார்.

இந்த வழக்கு சம்பந்தமாக 11 பேர் மீது நீலகிரி மாவட்ட காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்தார். மற்றொரு முக்கிய குற்றவாளியான சயான், விபத்தில் சிக்கி கோவை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று, பின் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது செய்யபட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொடநாடு காவலாளி ஓம் பகதூர் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட உதயகுமார், சதீசன், தீபு, மனோஜ், குட்டி ஆகிய 5 பேருக்கும் கேரளா மாநிலத்தில் நிகழ்ந்த பல்வேறு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருப்பதால் இவர்கள் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.