சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் இன்று இரண்டாவது நாளாக விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
பொதுவாக வழக்கு தொடர்பாக ஒருவரை விசாரிக்க வேண்டுமென்றால், அவர்களுக்கு சம்மன் அனுப்பி காவல்துறை அலுவலகம் வரவழைத்து விசாரணை நடத்துவது வழக்கம். ஆனால், கோடநாடு வழக்கை விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், சசிகலா வீட்டுக்கே சென்ற விசாரணை நடத்தி வருவது சமூக ஆர்வலர் களிடையே பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான ஊட்டி கோடநாடு எஸ்டேட்டில் ஜெ.மறைவுக்கு பிறகு, சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, அங்கு கொலை கொள்ளை நடைபெற்றது. இந்த கொள்ளை, கொலையை தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்கள் இதில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய நிலையில், நேற்று முதல், சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கை விசாரித்த வரும் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் தி.நகரில் உள்ள சசிகலா வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று சுமார் 5மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று 2வது நாளாக அங்கு சென்று விசாரணை நடத்தி வருகிறானர்.
மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை சசிகலாவிடம் கேள்வி கேட்டு வருகிறது. கோடநாடு தொடர்பான ஆவணங்கள், முக்கிய கேள்விகளுக்கு சசிகலா விளக்கமளித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.