கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை நீதிமன்றம்  ஜூலை மாதம் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களா, அவரது மறைவுக்கு பிறகு, கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி  கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. இந்த வழக்கு ஏற்கனவே அதிமுக ஆட்சியில் விசாரிக்கப்பட்டு இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் விசாரிக்கப்பட்டது.

அதற்காக,  கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. பின்னர், கடந்த மாதம்,  இவ்வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐடிக்கு மாற்றி அப்போதைய  தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து பல விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டு,   தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு சம்பந்தமாக  சுமார்  316 பேரிடம் விசாரணை நடத்தியதுடன்,  சசிகலாவிடம் 30 மணி நேரம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தியது. விசாரணையின் போது சசிகலாவிடம் 280 கேள்விகள் கேட்கப்பட்டன; அதற்கு சசிகலா அளித்த பதில்கள் 30 பக்கங்களாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதைக்கொண்டு கடந்த 2022ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது,  முக்கிய குற்றவாளிகளான சயான், ஜித்தன் ஜாய் ஆகியோர் நேரில் ஆஜராகிய நிலையில், சம்பவம் நடைபெற்ற பங்களாவில் ஆய்வு நடத்த வேண்டும் என ஜித்தன் ஜாய் மனு அளித்தார்.

இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், எழுத்துப்பூர்வமாகப் பதிலளிக்க நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஜூலை மாதம் 18ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.