நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், வழக்கை விசாரித்து வரும் தனிப்படையினர், நீதிமன்றத்தில் 3,600 பக்க விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களா, அவரது மறைவுக்கு பிறகு, கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி  கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. இந்த வழக்கு ஏற்கனவே அதிமுக ஆட்சியில் விசாரிக்கப்பட்டு இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் விசாரிக்கப்பட்டது. அதற்காக,  கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. பின்னர், கடந்த மாதம்,  இவ்வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐடிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான  தனிப்படை போலீசார் இதுவரை சாட்சிகள் மற்றும் குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணை தொடர்பான ஆவணங்களை ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிபதி முருகனிடம் ஒப்படைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 316 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 316 பேரிடம் பெற்ற வாக்குமூலங்கள் அடங்கிய 3, 600 பக்க விசாரணை அறிக்கையை இன்று ஒப்படைத்தனர். கோடநாடு வழக்கை தொடர்பாக சசிகலாவிடம் 30 மணி நேரம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தியது. விசாரணையின் போது சசிகலாவிடம் 280 கேள்விகள் கேட்கப்பட்டன; அதற்கு சசிகலா அளித்த பதில்கள் 30 பக்கங்களாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.