சென்னை:  பெண்களுக்கு அறிவுதான் உண்மையான அழகு, படிப்புதான் உலகிலேயே அழகான அணிகலன்  என AIACHE & Women’s Christian College இணைந்து நடத்தும் பாராட்டு விழாவில் பேசிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

AIACHE & Women’s Christian College  சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில்  முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது. அகில இந்திய கிறிஸ்தவ உயர்கல்வி சங்கம் மற்றும் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி இணைந்து சமத்துவம், முன்னேற்றம், வளம் என்ற வகையில் தமிழ்நாட்டை வழிநடத்தக்கூடிய முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பாராட்டு விழாவை நடத்தினர்.  பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவுக்கு வருகை தந்த முதலமைச்சரை மாணவிகள் வழிநெடுகிலும் நின்று நடனம் ஆடி வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  எனக்கு நன்றி சொல்லத் தேவையில்லை; உங்கள் அன்பின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்கிறேன். தேர்தல் பரப்புரை தொடங்குவதற்கு முன்பே தேர்தல் பரப்புரையை கல்லூரியிலேயே தொடங்கிவிட்டார்கள் என்றார். இந்த பாராட்டுவிழா எனக்கு கூடுதல் பொறுப்புணர்வை தருகிறது என கூறினார்.

நானும் எம்.சி.சி. பழைய மாணவன்தான் என்றவர்,   சிறுபான்மையினருக்கான திட்டங்களை இல்லை என்று கூறாமல் நிறைவேற்றித் தருவதுதான் திராவிட மாடல் ஆட்சி. சிறுபான்மையினருக்கான எஞ்சியுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவோம்.

படிப்பை கைவிட்ட பலர் புதுமைப்பெண் திட்டத்தால் பெண்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் பெண்கள் கல்லூரிகளில் சேருவது 34% உயர்ந்துள்ளது. புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலம் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந் 5 ஆண்டுகளில் பல குடும்பங்களில் தலையெழுத்தை திராவிட மாடல் அரசு மாற்றியுள்ளது.

வெற்றிக்கு குறுக்கு வழி இல்லை; மதிப்பெண் ஒன்றுதான் வெற்றிக்கு வழி என கூறினார். பக்குவத்தோடு அடையும் வெற்றிதான் நிலைத்து நிற்கும். கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

பெண்கள் என்றாலே அழகுதான்; ஆனால், அறிவுதான் பெண்களுக்கு உண்மையான அழகு. நாட்டில் வறுமை குறைந்த மாநிலமாக தமிழநாடு வளர்ந்துள்ளது.

கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது; கஷ்டப்படாமல் கிடைத்த எதுவும் நிலைக்காது. மற்ற மாநிலங்களோடு அல்லாமல், உலக நாடுகளுடன் தான் தமிழ்நாடு தற்போது போட்டியிட்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் 2வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

மேலும் அவர் கூறியது, கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பல அறிவிப்புகளை வெளியிட்டோம். அதனை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகின்றோம். மேலும் சில கோரிக்கைகளையும் நீங்கள் வைத்திருக்கின்றீர்கள். அதையும் கூடிய விரைவில் செய்து முடிப்போம்.

இதனைத்தொடர்ந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக மீண்டும் திமுக தான் ஆட்சியமைக்கும்  அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. உங்களது மீதமுள்ள கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றுவோம் என்றவர்,  மாணவர்கள் வளர்ச்சியில் எப்போதும் நான் உடன் இருப்பேன்.

இவ்வாறு கூறினார்.

[youtube-feed feed=1]