சென்னை: அரசு மருத்துவமனை கத்திக்குத்து சம்பவத்தில் புதிய திருப்பமாக,  அரசு மருத்துவருக்கு ஆதரவாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவர் காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில்,  அவதூறு பரப்புவதாக அரசு மருத்துவரை  தாக்கியவரின் தாயார் மற்றும் சகோரர்  மீது புகார் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கு வந்தவரின் மகன், அரசு மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதையடுத்து அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து காவல்துறையும், மருத்துவரை தாக்கியவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது தாய்க்கு தகுந்த சிகிச்சை அளிக்கவில்லை என்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர் அதை குறிப்பிட்டு கூறினார். அதுகுறித்து விளக்கம் கேட்டபோது ஏற்பட்ட மோதலில்தான் விக்னேஷ் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தினார்.  இதை  கைதான விக்னேஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

இதற்கிடையில், அரசு மருத்துவர் பாலாஜியின் ரூடான பேச்சு நடவடிக்கை, நோயாளிகளுக்கு முறையாக பதில் சொல்வது இல்லை என்ற குற்றச்சாட்டுக்களும் வெளியாகின.  மருத்துவரை கத்தியால் குத்தியதால் கைது செய்யப்பட்ட நபரின் தாயார், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குபோராடி வரும் நிலையில்,  மருத்துவரின் தவறான சிகிச்சை மற்றும் அவரின் நடவடிக்கையால் நொந்துபோய்தான் தனது மகன் இந்த அசம்பாவித செயலை செய்துவிட்டான் என கூறியிருந்தார்.

இதுபோல பலரும் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் அரசு மருத்துவர்களின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதுதொடர்பான விவாதங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.  மேலும் பல அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் அடாவடி நடவடிக்கை களை பலர் ஊடகங்களில் வெளியிட்டுவந்தனர். இதனால், இந்த விவகாரம் திசை மாறி போய்க்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், புதிய திருப்பமாக,   டாக்டரை கத்தியால் குத்திய விக்னேஷின் தாய் பிரேமா மற்றும் சகோதரர் லோகேஷ், மருத்துவர்கள்மீது  அவதூறு பரப்புவதாக தனியார் டாக்டர் மோசஸ் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  புகார் அளித்துள்ளார்.

அவரது புகார் மனுவில்,  ‘கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என நான் கூறியதாக தவறான கருத்து. என்னைப் பற்றி அவதூறு பரப்பி வருவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும். நுரையீரல் பிரச்னைக்கு 3 முறை தன்னிடம் பிரேமா சிகிச்சை எடுத்தார்’ என புகார் மனுவில் ஜேக்கலின் மோசஸ் குறிப்பிட்டுள்ளார்.