பாண்டிச்சேரி
சுத்தமான கிராமங்களுக்கு மட்டுமே இலவச அரிசி என்னும் தனது நிபந்தனையில் இருந்து பாண்டிச்சேரி ஆளுநர் கிரண் பேடி பின் வாங்கி உள்ளார்.
கடந்த சனிக்கிழமை அன்று பாண்டி ஆளுநர் கிரண் பேடி திருக்கனூர் அருகில் உள்ள மாணாடிப்பட்டு கிராமத்தை ஆய்வு செய்தார். அந்த கிராமத்தில் சாலைகளில் குப்பைகள் குவிந்துள்ளதையும் சுகாதார விழிப்புணர்வு இல்லாததையும் கண்ட கிரண் பேடி கோபம் அடைந்தார். அத்துடன் தன்னுடன் வந்த அதிகாரிகளை கடுமையாக கடிந்துக் கொண்டார்.
அதன் பிறகு “கிராமங்களில் இவ்வாறான நிலை நீடிப்பது தவறானது. இனி ஒவ்வொரு கிராமமும் திறந்த வெளி கழிப்பிடம் இல்லை எனவும் குப்பைகள், கழிவுகள் கண்டபடி கொட்டப்படவில்லை எனவும் பஞ்சாயத்து ஆணையரிடமும் தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடமும் சான்றிதழ் வாங்கி அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்காத கிராமங்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட மாட்டாது” என கிரண் பேடி அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த ஆளுநரின் அறிவிப்புக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளதாக அந்தக் கட்சிகள் தெரிவித்தன. நேற்று இரவு ஆளுநர் கிரண் பேடி தனது உத்தரவை திரும்பப் பெற்றுள்ளர்.
இது குறித்து, “அனைத்து கிராமங்களிலும் நல்ல சுகாதாரம் தேவை என்பதற்காக நான் அந்த அறிவிப்பை வெளியிட்டேன். ஏழை மக்களுக்கு இலவச அரிசி வழங்குவதை நான் தடுக்கவில்லை. கிராம சுகாதார மேம்பாட்டுக்காக அந்த அறிவிப்பை அளித்தேன். கிராம மக்களே சுகாதார சூழ்நிலையை திறம்பட அமைத்துக் கொள்வார்கள் என்னும் நம்பிக்கையில் நான் இந்த உத்தரவை வரும் ஜூன் மாதம் வரை விலக்கிக் கொள்கிறேன்” என கிரண் பேடி அறிவித்துள்ளார்.