ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்த தனது 7வயது மகளின் சடலத்தை எடுத்துச் செல்ல வசதியில்லாத நிலையில், தோளில் சுமந்துகொண்டு கதறும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்திற்கு புதிய கவர்னராக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்  நியமிக் கப்பட்டு உள்ள நிலையில், மருத்துவரான அக்கா தமிழிசை, ஏழை மக்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்றும், இதுபோல் இனியொரு சம்பவம் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  பத்திரிகை.காம் இணையதளம் கோரிக்கை வைக்கிறது.

நாடு முழுவதும் சுகாதார வசதிகளை மேம்படுத்த எவ்வளவோ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் பல மாநிலங்களில் அந்த திட்டங்கள் இன்னும் முழுமையாக  சென்றடையவில்லை. இலவச ஆம்புலன்சு, இறந்தவர்களின் உடலைச் எடுத்துச்செல்லும் இலவச அமரர் ஊர்தி போன்றவைகள் இருந்தாலும், அதன் சேவைகள் ஏழை மக்களுக்கு சரிவர கிட்டவில்லை.

இந்த நிலையில், இறந்த தனது மகளின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வசதியோ, அமரர் ஊர்தியோ இல்லாத நிலையில்,  தனது 7 வயது மகளின் உடலை தோளில் சுமந்து சென்ற சம்பவம் மக்களின் மனதை உருக்க வைத்துள்ளது.

தெலங்கானா மாநிலம் பொத்தப்பள்ளி மாவட்டம் கூனுறு கிராமத்தைச் சேர்ந்த சம்பத் என்பவரின் 7 வயது மகள் சிறுநீரக பாதிப்பு  காரணமாக அங்குள்ள கரீம்நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்திருந்தார். சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமி மரணத்தை தழுவிய நிலையில், இறந்த மகளின் உடலை எடுத்துச்செல்ல வழியின்றி சம்பத் தடுமாறினார்.

கையில் பணம் இல்லாத நிலையில், சிறுமியின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய விரும்பிய சம்பத், ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தித் தர மருத்துவமனையிடம் முறையிட்டும், அதற்கு மருத்துவர்களோ, மருத்துவமனை அதிகாரிகளோ செவிமடுக்காத நிலையில், சுமார் 2 மணி நேரம் மகளின் சடலத்தை தோளில் சுமந்தவாறு மருத்துவமனை வாயிலில் நின்று  கதறினார்.

அவரது கதறல், எந்தவொரு பொதுமக்களின் காதுகளையும் எட்டாத நிலையில், மகளின் உடலை தோளில் போட்டவாறு நடந்து சென்றார். இதைக்கண்ட மனிதாபிமானமான  ஆட்டோ ஒட்டுனர் ஒருவர், அவரை அணுகி சடலத்தை எடுத்துச் செல்ல முன்வந்தார். பின்னர் அந்த ஆட்டோவில் தனது இறந்த மகளின் சடலத்துடன் சம்பத் தனது சொந்த ஊருக்குச் சென்றார்.

இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியானது, தெலுங்கானா மாநில மருத்துவ மற்றும் சுகாதார துறை அமைச்சர் ஈட்டல ராஜேந்திரனின் சொந்த மாவட்டம் என்று கூறப்படுகிறது.

மருத்துவரான தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக பதவி ஏற்றதும், இதுபோன்ற சம்பவங்கள் தொடராதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.