சென்னை
தெற்கு ரயில்வே அதிகாரிகள் விரைவில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பகுதியில் ரூ.400 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டு இங்கிருந்து, தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கம் எதிரில் ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.
இதையொட்டி தெற்கு ரயில்வே சார்பில் ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கியது. வண்டலூர்- கூடுவாஞ்சேரி இடையே கிளாம்பாக்கத்தில் 3 நடைமேடைகளுடன் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இவற்றில், 2 நடைமேடைகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், 3-ஆவது நடைமேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த ரயில் நிலையத்தில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ளதால், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்துக்கு எளிதில் சென்று விடலாம். மேலும் ரூ.79 கோடியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் மையப் பகுதியை அடையும் வகையில் சுமார் 400 மீட்டர் தொலைவில் ஆகாய நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இங்கு நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) மற்றும் மின் தூக்கி (லிப்ட்) ஆகியவற்றுடன் கூடிய நடை மேம்பாலம் அமைய உள்ளது தெற்கு ரயில்வே அதிகாரிகள் கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் அமைக்கும் பணிகள் வரும் 30 நாள்களுக்குள் முடிவடைந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரயில்வே நடைமேடை அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றது என்றும், ரயில் நிலையத்திற்கான முகப்பு கட்டமைப்பு, பயணிகள் நிழற்குடை, கழிவறை உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.