சென்னை: பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மொத்தம் 88 ஏக்கர் பரப்பில், ரூ.315 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. 90 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், பொங்கலுக்கு பேருந்து நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகளை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, பிப்ரவரி மாதத்துக்குள் பணி முடிக்கப்படும் என்றவர், இங்கிருந்து 2,350 பேருந்துகள் வந்து, செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பேருந்து நிலையத்துக்கு வாகனங்கள் வந்து செல்லும்போது, அருகில் உள்ள ரயில்நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வருவோர், நேரடியாக பேருந்து நிலையம் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று மீண்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறியதுடன், பொங்கலுக்கு பயன்பாட்டிற்கு கொண்டுவர முதலமைச்சர் உத்தரவிட்டு இருப்பதாகவும் கூறினார். மேலும், சென்னை கோயம்பேட்டில் வீட்டு வசதித்துறை மூலம் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை ஆய்வு செய்தார்.