புதுடெல்லி: 2026ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில், ‘கோகோ’ போட்டி சேர்க்கப்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளது இந்திய ஒலிம்பிக் சங்கம்.
கோகோ என்பது இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டு என்றாலும், அது தற்போது உலகளவில் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் விளையாடப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின்போது ‘கோகோ’ விளையாட்டிற்கு ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் அங்கீகாரம் கிடைத்தது.
எனவே, 2026ம் ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டில் இப்போட்டி இடம்பெறும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கமும் அதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.
“கோகோ போட்டியை, காமன்வெல்த் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக்கில் சேர்ப்பதென்பது நீண்டநாள் கனவாகும். எதிர்வரும் 2022ம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுத் தொடரில், ‘கோகா’ ஒரு கண்காட்சிப் போட்டியாக இடம்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார் சர்வதேச கோகோ கூட்டமைப்புத் தலைவர் ராஜீவ் மேத்தா.