டெல்லி

மோடி அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஏதும் செய்யவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில்,

“நம் பெண்களுக்கு இழைக்கப்படும் எந்த அநீதியும் சகிக்க முடியாதது, வேதனையானது மற்றும் மிகவும் கண்டிக்கத்தக்கது. ‘மகள்களைக் காப்போம்’ என்ற மத்திய அரசின் பிரச்சாரம் நமக்குத் தேவையில்லை. மாறாக, ‘மகள்களுக்கு சம உரிமையை உறுதி செய்வோம்’ என்பதுதான் தேவை. பெண்களுக்கு தேவை பாதுகாப்பு அல்ல; மாறாக அச்சமில்லா சூழல்தான்.

நாட்டில் பெண்களுக்கு எதிராக ஒரு மணி நேரத்திற்கு 43 குற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன. நம் நாட்டில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பழங்குடி வகுப்பைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் 22 குற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அச்சம், மிரட்டல், சமூகக் காரணங்களால் பதிவாகாமல் போகும் குற்றங்கள் ஏராளம் உள்ளன.

பெண்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி, செங்கோட்டையில் தனது உரைகளில் பலமுறை பேசியுள்ளார். ஆனால், அவரது அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடந்த 10 ஆண்டுகளில் உறுதியான எதையும் செய்யவில்லை. மாறாக, பாதிக்கப்பட்டவர்களின் நடத்தையை கேள்விக்குள்ளாக்கும் வெட்கக்கேடான செயலை அவரது கட்சி பலமுறை செய்துள்ளது. சமூக மாற்றம் என்பது ஒவ்வொரு சுவரிலும் ‘மகள்களைக் காப்போம்’ என்று ஓவியம் வரைவதால் வருமா அல்லது அரசு சட்டம் – ஒழுங்கை திறமையாக கையாள்வதால் வருமா?

தடுப்பு நடவடிக்கைகளை நம்மால் எடுக்க முடியுமா? நமது குற்றவியல் நீதி அமைப்பு மேம்பட்டுள்ளதா? சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினர் இப்போது பாதுகாப்பான சூழலில் வாழ முடிகிறதா? இத்தகைய சம்பவங்களை அரசும் நிர்வாகமும் மறைக்க முயற்சிக்கவில்லையா? உண்மை வெளியே வரக்கூடாது என்பதற்காக, உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளை வலுக்கட்டாயமாக செய்வதை காவல்துறை நிறுத்திவிட்டதா?

2012 ஆம் ஆண்டு டெல்லியில் நிர்பயா சம்பவம் நடந்தபோது, நீதிபதி வர்மா கமிட்டியின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இன்று அந்தப் பரிந்துரைகளை முழுமையாகச் செயல்படுத்த முடியுமா?

2013 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட, பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டத்தின் விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதால், பணியிடத்தில் நமது பெண்களுக்கு அச்சமில்லாத சூழலை உருவாக்க முடியுமா?

அரசியலமைப்புச் சட்டம் பெண்களுக்கு சம அந்தஸ்தை வழங்கியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒரு தீவிரமான பிரச்சினை. இந்த குற்றங்களை தடுப்பது நாட்டுக்கு பெரும் சவாலாக உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருடனும் இணைந்து நாம் இதற்கு தீர்வு காண வேண்டும்.

பாலின விழிப்புணர்வு பாடத்திட்டம், பாலின பட்ஜெட், பெண்கள் உதவி மையங்கள், நகரங்களில் தெரு விளக்குகள், பெண்களுக்கான கழிப்பறைகள், காவல் துறை சீர்திருத்தங்கள், நீதித்துறை சீர்திருத்தங்கள் என்று பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவற்றின்மூலம், அச்சமில்லாத சூழலை உறுதி செய்ய முடியும்”

என்று அவர் பதிவிட்டுள்ளார்.