டில்லி:
காதி பெயரை பயன்படுத்தியதற்காக ரூ.525 கோடி இழப்பீடு வழங்க கோரி ஃபேப் இந்தியா நிறுவனத்துக்கு காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஃபேப் இந்தியா ஓவர்சீஸ் பிரைவேட் லிட்., தனது தயாரிப்புகளின் விலை பட்டியலில் ‘காதி’ என்ற பெயரை பயன்படுத்தி விற்பனை செய்து வருகிறது. கைகளால் செய்யப்பட்ட பொருட்கள் என்று எந்திரத்தில் தயாரான பொருட்களுக்கு விளம்பரம் செய்து வருகிறது. ராட்டை மற்றும் கைத்தறி மூலம் செய்யப்பட்ட பெ £ருட்களை மட்டுமே காதி என்று அழைக்கப்படுவது வழக்கம்.
ஃபேப் இந்தியாவின் ஜவுளி ரகங்களை மும்பையில் உள்ள ஜவுளி ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒரு பரிசோதனையில் ஆளிவிதைகளை கொண்டு பருத்தியால் செய்யப்பட்டது என்றும், மற்றொரு பரிசோதனையில் இது காதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இது அரசின் முகமையான காதி மற்றும் கிராம தொழிற்சாலை ஆணையத்தின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து ‘காதி’ என்ற பெயரை பயன்படுத்தி நஷ்டத்தை ஏற்படுத்தியதற்காக லாபத்தில் இருந்து ரூ. 525 கோடி வழங்க வேண்டும் என்று காதி ஆணையம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
காதி ஆணையத்தின் இந்த குற்றச்சாட்டை ஃபேப் இந்தியா நிறுவனம் மறுத்துள்ளது. இது குறித்து அதன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘காதி ஆணையத்தின் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக தகுந்த பதில் அளிக்கப்பட்டு வருகிறது. காதி ஆணைய சட்டத்தை எந்த வகையிலும் மீறப்படவில்லை. குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. ஆணையத்தின் நோட்டீஸ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
இந்த பிரச்னை 2015ம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது. ஃபேப் இந்தியாவின் விளம்பரங்களில் காதி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. ஆணையம் தலையிட்டதன் பேரில் விளம்பரம் 2 மாதங்களுக்கு பின்னர் நிறுத்தப்பட்டது. இது தொடர்பான சான்றிதழ் கோரி ஃபேப் இந்தியா தாக்கல் செய்த விண்ணப்பம் நிராகரிப்பட்டள்ளது. எனினும் தொடர்ந்து இந்த நிறுவனம் விதி மீறல்களில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.