மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் தென் மாநிலங்களின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
தொகுதி மறுவரையறை மற்றும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்:
மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்ற மாநிலங்கள், நாடாளுமன்றத்தில் தங்களுக்குள்ள பிரதிநிதித்துவத்தை இழக்காத வகையில் சட்டப்பூர்வமான உறுதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தினார்.

நீட் தேர்வு:
தமிழ்நாட்டில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள MBBS, BDS மற்றும் AYUSH மருத்துவப் படிப்பு இடங்களை, 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் நிரப்ப மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். நீட் தேர்வு கிராமப்புற மாணவர்கள் மற்றும் சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
நிதிப் பகிர்வு:
மாநிலங்களுக்கு மத்திய வருவாயில் இருந்து வழங்கப்படும் நிதிப் பகிர்வு முறையை நியாயமானதாகவும், முன்கூட்டியே கணிக்கக்கூடியதாகவும் மாற்ற வேண்டும் என்றார். சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் நிதி ரீதியாக பாதிக்கப்படக் கூடாது என்றும், மாநிலங்களுக்கு அதிக நிதி சுதந்திரம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், ஜிஎஸ்டி வரி விகிதங்களை நிர்ணயிப்பதில் மாநிலங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மை வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகள்:
கீழ்ப்பகுதி மாநிலங்களின் நீர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், நடுவர் மன்ற உத்தரவுகள் மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகளின் முடிவுகள் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். குறிப்பாக காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்சினைகளையும் அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் கடத்தல்:
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்வதை கடுமையாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், போதை மற்றும் மனநிலையை மாற்றும் மருந்துப் பொருட்களின் கடத்தலைத் தடுக்க மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உளவுத் தகவல்களைப் பகிர்வது, கடத்தல் கும்பல்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகளில் மாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
தென் மாநிலங்களின் பொருளாதார ஒருங்கிணைப்பு:
தென் மாநிலங்கள் இணைந்து பொதுவான பொருளாதார மற்றும் சரக்கு போக்குவரத்து மையங்களை உருவாக்க வேண்டும் என முதல்வர் முன்மொழிந்தார். ஒருங்கிணைந்த உற்பத்தி மண்டலங்கள், பல்வேறு போக்குவரத்து வசதிகளை இணைக்கும் சரக்கு முனையங்கள் மற்றும் தொழில், சரக்கு போக்குவரத்துக்கான வழித்தடங்களை உருவாக்க வேண்டும் என்றார்.
பெங்களூரு–ஓசூர் மெட்ரோ:
பெங்களூரு மெட்ரோ ரயிலை பொம்மசந்திராவில் இருந்து ஓசூர் வரை நீட்டிக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இது மாநிலங்களுக்கு இடையேயான உள்கட்டமைப்பு ஒத்துழைப்புக்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
நீலப் பொருளாதாரம்:
தென் மாநிலங்களின் வளர்ச்சியில் கடல் சார்ந்த பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். துறைமுகங்கள், கடலோர கப்பல் போக்குவரத்து, மீன்பிடித் தொழில், கடல் சார்ந்த தொழில்கள், கடல்சார் சேவைகள் மற்றும் கடலோர சுற்றுலா ஆகியவற்றை ஒருங்கிணைத்து வளர்க்க வேண்டும் எனக் கூறினார்.
கடலோர உள்கட்டமைப்பு:
துறைமுகங்களையும் உள்நாட்டுப் பகுதிகளையும் இணைக்கும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும், கடலோர பொருளாதார மண்டலங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கடல்சார் உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உலகளாவிய வர்த்தகச் சங்கிலியுடன் தென் மாநிலங்களை இணைக்க முடியும் என்றார்.
கூட்டாட்சி ஒத்துழைப்பு:
மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலோ, மாநிலங்களுக்கு இடையிலோ ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பேச்சுவார்த்தை, பரஸ்பர மரியாதை மற்றும் சட்டத்தின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என முதல்வர் வலியுறுத்தினார்.
“வலுவான மாநிலங்களே வலுவான இந்தியாவை உருவாக்கும்” என்ற கருத்தை வலியுறுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.