திருவனந்தபுரம்: உலகப் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் டியாகோ மாரடோனாவின் மறைவுக்கு, தனது விளையாட்டுத் துறையில் 2 நாள் துக்கம் அறிவித்துள்ளது கேரளாவின் பினராயி விஜயன் அரசு.

கேரள மாநில வரலாற்றில், இதுபோன்ற துக்க அனுஷ்டிப்பு நிகழ்வுகள் அபூர்வமாகும்.  சோஷலிஸ்டுகளின் பக்கம் நின்ற நட்சத்திர கால்பந்து வீரர் மாரடோனா என்று தனது புகழஞ்சலியில் கூறியுள்ளார் பினராயி விஜயன்.

“புகழ்வாய்ந்த மாரடோனாவின் மறைவை நினைத்து உருகி வேதனைப்படும் உலகெங்கிலுமுள்ள கால்பந்து ரசிகர்களில், கேரள மக்களும் அடக்கம்.

கால்பந்து ஒரு அழகிய விளையாட்டு மற்றும் மாரடோனா மிகவும் பிரபலமான ஒருவர். கடந்த 1986ம் ஆண்டு, அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பையை வென்றதிலிருந்தே, வஅர் கேரள மக்களின் மனதில் குடிகொண்டுள்ளார்.

ஒவ்வொரு உலகக்கோப்பையின்போதும், அவரின் போஸ்டர்கள், கேரளாவின் பல இடங்களிலும் காணப்படும். கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவுடனான அவரின் நெருக்கம், ஆதிக்க சக்திகளுக்கு எதிரான அவரின் எண்ணத்தைப் பறைசாற்றுகிறது” என்றும் கேரள முதல்வர் கூறியுள்ளார்.

நவம்பர் 26 மற்றும் 27ம் தேதிகளில், அர்ஜெண்டினாவின் மாரடோனாவுக்காக, கேரளாவில் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்தியளவில், அதிக கால்பந்து ரசிகர்களைக் கொண்ட மாநிலங்களில், கேரளா குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின்போது, கேரளாவின் சில பல தியேட்டர்களில், லைவ் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்வுகளும் உண்டு.