கொச்சி: இடைத்தேர்தலில், மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அந்த கட்சியின் மேடையில் ஏறி பேசிய கேரளாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தாமஸ் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரில் கடந்த மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்க மூத்த காங்கிரஸ் தலைவர் கே.வி.தாமசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் பங்கேற்க கட்சி அனுமதி வழங்கவில்லை. ஆனால் அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறி மார்சிஸ்ட் கருத்தரங்கில் பங்கேற்றார்.
இதையொட்டி அவர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், அங்கு, நடைபெற உள்ள திருக்காக்கரா இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கூட்டணி வேட்பாளருக்கு பணியாற்ற போவதாக கே.வி.தாமஸ் தெரிவித்திருந்தார்.
இந்த இடைத்தேர்தலில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரா டாக்டர் ஜோ ஜோசப் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கொச்சியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் தேர்தல் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் எல்டிஎஃப் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மேடையில், கே.வி. தாமஸ்-ம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, நாங்கள் மக்களுடன் நிற்கிறோம். காங்கிரஸின் மென்மையான இந்துத்துவ அணுகுமுறை நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும். நான் ஒரு காங்கிரஸ்காரனாக இங்கே நிற்கிறேன். எல்.டி.எஃப் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். வலிமையான ஆட்சியாளர்களால் மட்டுமே மாநிலத்தை நெருக்கடியின் போதும் வழிநடத்த முடியும். பினராயி விஜயனால் அதை செய்ய முடியும். பினராயி விஜயன் வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்தால் அதை எதிர்ப்போம் என்பது காங்கிரஸின் அணுகுமுறை சரியில்லை. நான் கொச்சி மற்றும் திருக்காக்கரா வளர்ச்சி திட்டங்களை ஆதரிக்கிறேன் என்று பேசினார்.
கே.வி.தாமஸ் பேச்சு கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கே.வி.தாமஸ், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாககூறி, அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கேரளா பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. சுதாகரன் அறிவித்துள்ளார்.