திருவனந்தபுரம்

குவைத்துக்கு செல்ல கேரள அமைச்சருக்கு அனுமதி மறூக்கப்பட்டதற்கு அம்மாநில முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்

கடந்த 12 ஆம் தேதி குவைத்தில் உள்ள மங்காப் என்ற இடத்தில் சுமார் 195 புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்டுவிபத்தில் 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், எகிப்து மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் உள்பட மொத்தம் 49 பேர் தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்க குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பணிகளை மேற்பார்வை செய்ய மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் குவைத் சென்றுள்ளார்.  குவைத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியான நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜை குவைத்திற்கு அனுப்ப கேரள அரசு முடிவு செய்தது. அவரை குவைத் அனுப்புவதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை.

கேரள முதல்வர் பினராயி விஜயன்,

“கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கொச்சி விமான நிலையத்திற்கு வந்தார். ஆனால் மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் அவரால் பயணம் செய்ய முடியவில்லை. தற்சமயம் இதை பேசுபொருளாக்க நான் விரும்பவில்லை. இதைப்பற்றி பிறகு விவாதித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு மிகவும் தவறானது”

என்று தெரிவித்தார்.