திருவனந்தபுரம்: கேரள மாநிலத்திலிருந்து சிவில் சர்வீஸ் தேர்வில் தேறிய முதல் பழங்குடியினப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஸ்ரீதன்யா சுரேஷ். இவரின் வயது 22.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அகில இந்திய அளவில் 410வது ரேங்க் பெற்றுள்ளார் ஸ்ரீதன்யா. இவரைத் தவிர, இதர மூன்று பேர், அதே மாநிலத்திலிருந்து சிவில் சர்வீஸ் தேர்வில் முன்னணி ரேங்க் பெற்றுள்ளனர்.
அவர்களில், ஸ்ரீலஷ்மி என்பவர் 29வது ரேங்கும், ரஞ்சனா மேரி வர்கீஸ் என்பவர் 49வது ரேங்கும், அர்ஜுன் மோகன் என்பவர் 66வது ரேங்கும் பெற்றுள்ளனர். கேரள மாநிலத்திலிருந்து மொத்தம் 29 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேறியுள்ளனர்.
“நான் ஒரு மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்தவள். எங்கள் மாவட்டத்தில், பழங்குடியின மக்கள்தொகை கணிசமான அளவில் இருந்தாலும், இதுவரை யாரும் சிவில் சர்வீஸ் தேர்வில் தேறவில்லை. எனவே, தற்போதைய எனது வெற்றி என்பது, எதிர்கால தலைமுறையினரை ஊக்குவிப்பதாக அமையும்” என தெரிவித்துள்ளார் ஸ்ரீதன்யா சுரேஷ்.
– மதுரை மாயாண்டி