சுற்றுச்சூழல் மீது கொண்ட அக்கறையின் காரணமாகவும், சூழலியலை பாதுகாப்பதில் தன்னால் முடிந்த பங்களிப்பை செலுத்த வேண்டும் என்கிற சமூக அக்கறையாலும் முழுக்க முழுக்க ஜீரோ பிளாஸ்டிக் முறையை பயன்படுத்தி டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஒன்றை நடத்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பிட்டு ஜான்.

கேரள மாநிலம் கொத்தமங்கலம் என்ற ஊரில் தான் இது போன்ற கிரீன் ஸ்டோர் என்ற பெயரில் பல சரக்கு கடை நடத்தி வருகிறார் பிட்டு ஜான் என்ற இளைஞர். எம்.டெக் பட்டதாரியான இவர் சுற்றுச்சூழல் மீது பேராரர்வம் கொண்டவர். பெங்களூரில் பணியாற்றி வந்த அவர், அலுவலக பயணமாக ஒரு முறை லண்டன் சென்ற போது அங்கிருந்த ஜீரோ பிளாஸ்டிக் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஒன்றை பார்த்துள்ளார். அப்போதிருந்தே இதேபோல் தனது ஊரில் கடை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியுள்ளது இவருக்கு.
ஊர் திரும்பியதும் அது தொடர்பாக குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்க, பொறியியலில் இரண்டு பட்டங்கள் பெற்று லட்சங்களில் சம்பாதிக்கும் மகன், திடீரென பல சரக்கு கடை நடத்துவதாக கூறியதை முதலில் ஏற்க மறுத்த அவரது பெற்றோர், பின்னர் மகனின் புதுமையான முயற்சிக்கு இசைவு தெரிவித்தனர். இதையடுத்து கொத்தமங்கலத்திலேயே கிரீன் ஸ்டோர் என்ற பெயரில் கடையை தொடங்கியுள்ளார் ஜான்.

கடை முழுவதும் கண்ணாடி ஜார்களும், பேப்பர் பைகளும் மட்டுமே பயன்படுத்தும் இவர், கிரீன் ஸ்டோரின் உட்கட்டமைப்பு வசதிக்காக மட்டும் ரூ.45 லட்சம் செலவழித்துள்ளார். இது அவரின் ஒட்டு மொத்த சேமிப்பு தொகையாகும். நாளொன்றுக்கு 200 முதல் 250 வாடிக்கையாளர்கள் வரை வந்து செல்வதாகவும், மக்கள் மத்தியிலும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.

ஜானின் இந்த முயற்சியை பற்றி அறிந்த பலரும், இது பற்றி தெரிந்து கொள்ள இவரிடம் ஆலோசனை கேட்டு வருகின்றனர். இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் கடையின் உட்கட்ட மைப்பை நிறுவுவது, பராமரிப்பது பற்றி கேட்டுத்தெரிந்து சென்றுள்ளனர். இவரும் பிளாஸ்டிக் இல்லாத் நிலை உருவாக வேண்டும், சுற்றுச்சூழல் பேணப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னிடம் ஆலோசனைகள் கேட்பவர்களுக்கு உரிய யோசனைகள் அளித்து ஜீரோ பிளாஸ்டிக் முறையில் கடைகள் நிறுவ வழிகாட்டி வருகிறார்.
– லெட்சுமி பிரியா