திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் மலப்பபுரத்தை சேர்ந்த ஜமீதா (வயது 34) என்பவர் வெள்ளிக்கிழமை நடைபெறும் இஸ்லாமிய தொழுகையை தலைமை தாங்கி நடத்தியுள்ளார். இதை நடத்த பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் சூழலில் வயது வரம்பையும், பழைய நடைமுறைகளையும் மீறி இதை செய்த முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார்.

இதற்காக அவர் பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். குரான் சுன்னத் சொசைட்டி பொதுச் செயலாளராக உள்ள இந்த பெண் இமாம் ஜமீதா மலப்புரம் மாவட்டம் வாண்டூரில் மத்திய கமிட்டி அலுவலகத்தில் இந்த தொழுகையை நடத்தியுள்ளார்.

இது குறித்து ஜமீதா கூறுகையில்,‘‘மசூதி நிர்வாக குழுவிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இஸ்லாமுக்கு எதிராக நடந்துவிட்டதாக கூறுகின்றனர். இதேபோல் சமூக வலை தளங்களிலும் எதிர்ப்பு உள்ளது. மதத்தையும், மத நம்பிக்கையையும் அழித்துவிட்டதாக என் மீது குற்றம்சாட்டுகின்றனர். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ குரான் சுன்னத் சொசைட்டி பழமையான மற்றும் நியாயமற்ற முத்தலாக் முறையை எதிர்த்து பல போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்தியுள்ளது. இதற்காக கடந்த காலங்களில் பல அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளேன். இந்த போராட்டம் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் என்னை இந்த பூமியில் இருந்து அகற்ற அவர்கள் முடிவு செய்துள்ளனர். நான் அதற்கு தயாராக உள்ளேன்’’ என்றார்.