திருவனந்தபுரம்: மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளையும் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை கேரளா செயல்படுத்தாது என்று கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மாநிலத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளை தனியார்மயமாக்க அரசாங்கம் தயாராக இல்லை. இது நிதி ஆயோக்கின் கட்டாய உத்தரவு என்று தெரிவிக்கப்படவில்லை. எது  எப்படியிருந்தாலும், நாங்கள் அதற்கு தயாராக இல்லை.

மத்திய அரசின் பல கொள்கைகள் மாநில நலன்களுக்கு எதிரானவை. மாநிலத்திற்கு போதுமான நிதி கிடைக்கவில்லை. புதிய திட்டங்களில் பெரும்பாலானவை வட மாநிலங்களுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டவை.

அனைத்து மாவட்ட மருத்துவமனைகளும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளாக மேம்படுத்தப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் கருத்துக்கு கேரள அரசு உடன்படவில்லை.  அதற்கு பதிலாக, மாவட்ட மருத்துவமனைகளில் கூடுதல் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பது மாநிலத்தின் கருத்தாகும் என்று அவர் கூறினார்.

முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் நிதி ஆயோக் பரிந்துரை சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது பொது, தனியார், கூட்டு மாதிரியில் மருத்துவக் கல்லூரிகளை மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைக்க வேண்டும் என்பது அந்த பரிந்துரையாகும்.