திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலின் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளை முந்தைய காலங்களைப் போலவே பாதுகாக்கும் வகையிலான சட்டவரைவு ஒன்றை, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ளது கேரளாவின் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி.
வரும் சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இந்த சட்டவரைவு, சட்டமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு சட்டமாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தால், சபரிமலை கோயிலின் பழைய பாரம்பரிய வைதீக நடைமுறைகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும்.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பானது, பெரிய சலசலப்புகளையும் சச்சரவுகளையும் ஏற்படுத்தியது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல் செய்வதில் பினராயி விஜயன் அரசு உறுதியுடன் இருக்க, காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
கேரளத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ள சூழலில், காங்கிரஸ் கூட்டணியின் இந்த சட்டவரைவு வெளியீடு ஒரு பெரிய பிரச்சார உத்தியாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், இந்த விஷயம் நீதிமன்றத்தில் இருப்பதால், எதுவும் செய்வதற்கில்லை என்று கேரளாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.