திருவனந்தபுரம்: தனது மாநில சுற்றுலாத் தளங்களை, அக்டோபர் மாதம் முதல் திறப்பதற்கு முடிவுசெய்துள்ளது கேரள மாநில அரசு.

சுற்றுலா வருமானத்தைப் பெரிதும் நம்பியுள்ள கேரளத்தில், கொரோனா காரணமாக, கடந்த பல மாதங்களாக சுற்றுலா மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், ஏகப்பட்ட பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், மாநில சுற்றுலா அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் பேசியதாவது, எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் கேரளாவில் சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்றார். இதுதொடர்பாக, முதல்வரின் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலா மையங்களை தொடர்ந்து, ஆரோக்கியம் தொடர்பான சுற்றுலா மையங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரவிருப்பதை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க மாநில அரசு இம்முடிவை எடுத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.