திருவனந்தபுரம்

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயிர் காக்கும் அனைத்து வகையான மருந்துகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா மாநில மருத்துவ பணிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் இந்த மருந்துகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மற்றவர்கள் இந்த மருந்தை டாக்டர்களின் பரிந்துரை அடிப்படையில் மானிய விலை பெற்றுக் கொள்ளலாம்.

தமனிகளில் ஏற்படும் ரத்த அடைப்பை சரிசெய்ய உதவும் திரோபிபன் ஊசி மருந்து உள்ளிட்ட அனைத்து வகையான மாத்திரை, மருந்துகள் அரசு மருத்துவமனை மருந்தகங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இதன் ஒரு டோஸ் மதிப்பு ரூ. 25 ஆயிரமாகும். பக்க வாதத்துக்கு பயன்படும் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள மருந்துகளும் வழங்கப்படும்.

இந்த வகையில் மொத்தம் 245 வகையான மருந்துகள் இந்த திட்டத்தில் கீழ் கிடைக்கச் செய்யப்படும். இதற்காக ரூ 125 கோடியை மாநில அரசு ஓதுக்கீடு செய்துள்ளது. காருண்யா திட்டத்தின் கீழ் இத்தகைய மருந்துகள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.