திருவனந்தபுரம்: 30 ஜனவரி அன்று, சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் மாநிலம் முழுவதும் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் ஆல் எற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவின் ஒருமைத்தன்மையை உணர்த்தும் வகையில் போராட்டக்காரர்கள் நாட்டின் மனித வரைபடங்களை உருவாக்கினர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தனது போராட்டத்தைத் தீவிரப்படுத்திய காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப், வயநாடு மற்றும் கோழிக்கோடு தவிர்த்து 12 மாவட்டங்களில் மனித வரைபடத்தை உருவாக்க ஏற்பாடு செய்திருந்தது.
வயநாட்டில், பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினார். கோழிக்கோட்டின் மூத்த காங்கிரஸ் தலைவர் எம், கமலத்தின் மறைவு காரணமாக அங்கு போராட்டம் ரத்து செய்யப்பட்டது.
கேரளாவில், காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களாகவே எம்,பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களின் தலைமையில் பல்வேறு எதிர்ப்பு ஊர்வலங்களை ஏற்பாடு செய்து வருகிறது.
மாநிலத்தின் தலைநகரில் போராட்டக்காரர்களால் உருவாக்கப்பட்ட மனித வரைபடத்தில் மூத்த காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருமான ஏ.கே.ஆண்டனி பங்கேற்றார். சிஏஏவுக்கு எதிரான தங்கள் போராட்டத்தைப் பதிவு செய்வதில் கட்சித் தொண்டர்களை வழிநடத்திய ஆண்டனி, இச்சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பை மேலும் முடுக்கிவிடும் என்று தெரிவித்தார்.
அந்தந்த பகுதிகளில் உள்ள விளையாட்டுத் திடல்களில் காங்கிரஸ் தொண்டர்கள் அணிதிரண்டு தேசத்தின் வரைபட உருவில் நின்று, ஒருவருக்கொருவர் கைகளைப் பற்றிக்கொண்டு, அதன் அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.