கொச்சி

கேரள மாநிலத்தில் ஒரு தனியார் வங்கியில் பணிக்கு ஆட்களை ஒரு ரோபோ தேர்வு செய்து வருகிறது.

நாட்டில் உள்ள தேசிய வங்கிகளில் பணி புரிய எழுத்துத் தேர்வு அதன் பிறகு நேர்காணல் என்னும் கடினமான முறையைப் பின்பற்றி வருகின்றன.    ஆனால் தனியார் வங்கிகளில் கணினி மூலம் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்து வருகின்றனர்.   பல தனியார் வங்கிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை ஆரம்பக் கட்ட தேர்வுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் கொச்சியை தலைமையகமாகக் கொண்டு ஃபெடரல் வங்கி நடைபெற்று வருகிறது.  இந்த வங்கி பணியாளர் தேர்வுக்கு ஃபெட்ரெக்ரூட் என்னும் ரோபோவை பயன்படுத்துகிறது.    பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அளிக்கும் சுய விவரக்குறிப்பின் அடிப்படையில் ரோபோ பலகட்டத்தில்  கேள்விகளைக் கேட்டுத் தேர்வு செய்த பின்பு உளவியல் மற்றும் விளையாட்டு அடிப்படையிலான மதிப்பு சோதனைகள் நடத்தப்படும்.

இவ்வாறு நடைபெறும் ஒவ்வொரு கட்ட தேர்விலும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறும் தேர்வை வங்கியின் அதிகாரிகள் நடத்துவார்கள்.   இந்த தேர்வு முடிவுகளைப் பொறுத்து வேலைவாய்ப்பு நியமன ஆணையை ரோபோ வழங்கும்.   அது மட்டுமின்றி தேர்வு செய்பவர்களின் பெற்றோருக்கும் ரோபோ செய்தி அனுப்பும்.