திருவனந்தபுரம்: திருமண மண்டபங்களில் இனி மணமக்களின் வயது தொடர்பான ஆவணங்களை பாதுகாத்து வைக்குமாறு கேரள அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடப்பதாக புகார்கள் எழுந்தன. மாநிலம் முழுவதும் இதேபோன்று புகார்கள் வந்தன. இந்த புகார்கள் அனைத்தும் மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டன.
இதையடுத்து, குழந்தை திருமணங்களை தடுக்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. இந்நிலையில், திருமண மண்டபங்களில் மணமக்களின் வயது சான்றிதழ் தொடர்பான ஆவணங்களை கட்டாயம் பத்திரப்படுத்தி வைக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
திருமணம் தொடர்பாக, ஆணின் வயது 21ம், பெண்ணின் வயது 18ம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இருந்தால் திருமணம் நடத்த மண்டபங்களை வாடகைக்கு கொடுக்க கூடாது என்றும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் அந்த உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், அதனை மீறும் திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.