கேரளாவில் ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 22 வரை கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகிய பகுதிகளுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, தவிர ஆலப்புழா, கண்ணூர், காசர்கோடு, திருச்சூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவின் கொச்சி மற்றும் உள்மாவட்டங்களிலும் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம் 11 முதல் 20 செ.மீ. மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
மேலும், ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை மோசமான வானிலை காரணமாக மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடற்கரைகளில் மீன்பிடிக்க வேண்டாம் என்று IMD அறிவுறுத்தியுள்ளது.
பலத்த காற்று வீசும் என்பதால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து விழும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.