கொரோனாவை வீழ்த்திய  கேரள தம்பதியர், ‘டிஸ்சார்ஜ்’.

‘இது அறிவியல் அதிசயம்’’ என்று வர்ணிக்கிறார்கள், கேரள மாநில மருத்துவர்கள்.

அதிசயம் என்ன?

பத்தனம்திட்டாவில் உள்ள ரன்னியை சேர்ந்த 93 வயது தாமஸ் ஆபிரகாமும், 88 வயதான அவர் மனைவி மரியம்மாளும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர்.

இத்தாலியில் இருந்து ஊர் திரும்பிய மகனால், அந்த தம்பதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டது.

கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும்  கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

60 வயதைத் தாண்டியவர்கள், கொரோனாவுக்கு தாக்குப் பிடிக்க மாட்டார்கள் என்று மருத்துவர்களே, பிரகடனம் செய்துள்ள நிலையில்-

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய பிரச்சினை உள்ளிட்ட ‘எக்ஸ்டிரா’ வியாதிகளும் இந்த தம்பதியருக்கு ஏற்கனவே இருந்தன.

23 நாட்கள் அவர்களுக்கு அனைத்து நோய்களுக்கும்  சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஷா, இந்த முதியோர் விவகாரத்தில் விஷேச கவனம் செலுத்தினார்.

‘ அவர்கள் எப்படி உள்ளார்கள்?’ என்று தினமும் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்து வந்தார்.

கொரோனா உள்ளிட்ட அனைத்து வியாதிகளையும் வென்று , பரிபூரண குணமடைந்த இந்த தம்பதியர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’  செய்யப்பட்டனர்.

வீட்டுக்கு வந்துள்ள இருவரும், ‘இன்னும் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

– ஏழுமலை வெங்கடேசன்