ஜான்சி: வலதுசாரி இந்துத்துவ கும்பலால் நேரவிருந்த ஆபத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள, கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் இருவர், உத்திரப்பிரதேசத்தில், தங்களின் சமய சீருடையைக் கலைந்து, வழக்கமான உடையை மாற்றிக்கொண்டு, ரயிலில் பயணித்துள்ளனர்.
அந்த கன்னியாஸ்திரிகள் இருவரும், தங்களுடன் இரண்டு பெண்களை அழைத்துக்கொண்டு, ஒடிசா மாநிலம் ரூர்கேலாவுக்கு பயணம் செய்துள்ளனர். அவர்கள் பயணித்த ரயில், உத்திரப்பிரதேச மாநிலம் ஜான்சிக்கு வந்துள்ளது.
அப்போது பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் ஒரு குழுவினர், குறிப்பிட்ட அந்த இரண்டு பெண்களை மதம் மாற்றுவதற்குத்தான் இந்த கன்னியாஸ்திரிகள் அழைத்து செல்கிறார்கள் என்றும், இது மாநில அரசின் மதமாற்ற தடைச்சட்டத்திற்கு விரோதமானது என்றும் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், கன்னியாஸ்திரிகளை தாக்க முற்பட்டனர்.
இதனையடுத்து, அவர்களுக்கு பாதுகாப்பளிக்க அதிகாரிகள் முன்வந்தனர். இந்நிலையில், அவர்கள் தங்களின் கன்னியாஸ்திரி உடையைக் களைந்து, சாதாரண உடையை மாற்றிக்கொண்டு, தங்களின் பயணத்தை மறுநாள் வெறொரு ரயிலில் தொடர வேண்டியதானது.
கன்னியாஸ்திரிகளுடன் வந்த அந்த குறிப்பிட்ட 2 பெண்கள், டெல்லியில் நடைபெற்ற ஒரு மதம் சார்ந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஒடிசாவிலிருந்து வந்தவர்கள். மாநாடு முடிந்தபிறகு, அந்தப் பெண்கள் வீடு திரும்புகையில் அவர்களுக்கு பாதுகாப்பாக சென்றனர் இந்த கேரள கன்னியாஸ்திரிகள். அப்போதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பாஜக ஆட்சியிலும் சரி, மாநில(உத்திரப்பிரதேசம்) பாஜக ஆட்சியிலும், மக்கள் எந்தளவிற்கு சீரழிகிறார்கள் என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.