கொடத்தூர்
ரூ.100க்கு மீன் வாங்கியவரின் பையில் மீன் விற்றவரின் பணம் ரூ.20000 விழுந்துள்ளதை அடுத்து அவர் அதை மீன் வியாபாரியிடம் திருப்பி அளித்துள்ளார்.
கேரள மாநிலம் கொடத்தூர் என்னும் ஊரில் ஹாரிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊருக்கு அருகில் உள்ள பெரும்படப்புபரா என்னும் ஊரில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சரக்கு ஆட்டோவில் மீன்கள் விற்பதைக் கண்டு அவர் ரூ.100க்கு மீன் வாங்கி எடுத்துச் சென்றுள்ளார்.
இந்த மீன்களை விற்ற கோயா என்னும் மீன் வியாபாரி அடுத்த நாள் மீன்கள் வாங்க ரூ.20000 எடுத்து தனியாக வைத்திருந்தார். அந்த பணம் தவறுதலாக ஹாரிஸ் வாங்கிய மீன் அடங்கிய பிளாஸ்டிக் பையில் விழுந்து விட்டது. அதை இருவரும் கவனிக்கவில்லை.
வீட்டுக்குச் சென்று மீனுடன் ரூ.20000 இருப்பதைக் கண்ட ஹாரிஸ் அது மீன் வியாபாரியின் பணம் என்பதைத் தெரிந்துக் கொண்டு அடுத்த நாள் அந்த மீன் வியாபாரியைத் தேடிக் கண்டுபிடித்துத் திருப்பிக் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் கேரள மக்களிடையே பரவி அனைவரும் ஹாரிஸை புகழ்ந்து வருகின்றனர்.