கோழிக்கோடு:
கர்ப்பிணி வயிற்றில் உதைத்து சிசு கொல்லப்பட்ட கொடூரம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொடஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ஜோஸ்னா ஷிபி, வயது 28. இவர் நான்கு மாத கர்ப்பிணி ஆவார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் இவருடைய கணவருக்கும் அருகில் வசிக்கும் சரசமா மற்றும் சைதல்வி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டது.
நிலத்தகராறு குறித்து ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் சரசமா மற்றும் சைதல்வி ஆகியோரை எச்சரித்துச் சென்றனர்.
சரசமா மற்றும் சைதல்வி ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள். அந்தத் தொடர்பில் நிலத்தகராறு தொடர்பாக உள்ளூர் கட்சிக்காரர்கள் சிலரை உதவிக்கு அழைத்துள்ளனர்.
அங்குவந்த வெலன்கோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தம்பி, ஜோய், ரஞ்சித், பினோய் ஆகியோர் சரசமா மற்றும் சைதல்வி ஆகியோர் ஜோஸ்னா ஷிபி மற்றும் அவரின் கணவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். .
அப்போது உள்ளூர் மார்க்ஸிஸ்ட் கட்சிச் செயலாளரான தம்பி, கர்ப்பிணியான ஜோஸ்னா ஷிபி வயிற்றில் காலால் எட்டி உதைத்தார். இதன் காரணமாக ஜோஸ்னா ஷிபிக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் கருவை கட்டாயமாக கலைக்க வேண்டிய பரிதாப நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டார்.
இது குறித்து கொடஞ்சேரி காவல்நிலையத்தில் ஜோஸ்னா ஷிபி புகார் அளித்ததன் பேரில், அவரை தாக்கிய மாரிக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் கொல்லம் நகரில் காரில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவரை மதுபோதையில் இருந்த மார்க்ஸிஸ்ட் கட்சியினர் சிலர் வெளியே இழுத்து அவரை வயிற்றில் எட்டி மிதித்தத சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.