நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கேரள மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 2-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது.
முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமையும் புதிய அரசில் அமைச்சர்களாகப் புதியவர்கள் பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உலக சுகாதார அமைப்பின் பாராட்டைப் பெற்ற முன்னாள் சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜாவுக்கு இம்முறை எந்தப் பொறுப்பும் அளிக்கவில்லை .
இந்நிலையில், கேரள நடிகைகள் பலரும் சைலஜா டீச்சருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
“அமைச்சரவையில் சைலஜா டீச்சருக்கென ஓர் இடம் உள்ளது. நம் மாநில மக்கள் அவரது சிறந்த தலைமையின் கீழ் இருக்க உரியவர்கள். இதற்கு எந்த சப்பைகட்டும் கிடையாது. மக்கள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஓரங்கட்டுவது கட்சியை ஒரு கேள்விக்குறியான நிலைக்குத் தள்ளுகிறது. உடனடியான, திறமையான ஆட்சியைத் தவிர இப்போதைய முக்கியத் தேவை என்ன? எங்கள் டீச்சரை மீண்டும் கொண்டு வாருங்கள்” என்று நடிகை பார்வதி திருவோத்து ட்வீட் செய்துள்ளார்.
‘‘இப்போது இல்லையென்றால் பின் எப்போது அவர் நம் மாநிலத்துக்குத் தேவைப்படுவார்?” என்று நடிகை ரம்யா நம்பீசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
”நமக்குக் கிடைத்த மிகச்சிறந்த சுகாதாரத்துறை அமைச்சர்களில் ஒருவர் சைலஜா. அவருக்கு இந்தத் தொற்றுக் காலத்தில் அமைச்சரவையில் இடமில்லையா? என்னதான் நடக்கிறது பினராயி விஜயன்?” என்று நடிகை மாளவிகா மோகனன் ட்வீட் செய்துள்ளார்.
நடிகை ரீமா கல்லிங்கலும் இந்த முடிவுக்கு எதிராகத் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். #BringBackShailajaTeacher என்கிற ஹேஷ்டேகில் நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.