கொச்சி

கேரள உயர்நீதிமன்றம் ரஜினிகாந்த் நடித்த மன்னன் திரைப்பட பாடலை மேற்கோள் காட்டி ஒரு ஐந்தரை வயது சிறுவனை தாய் பராமரிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த மாஸ்டர் முகமது அபி சேக் என்னும் சிறுவனின் தாயை இஸ்லாமிய முறைப்படி அவனுடைய தந்தை விவாகரத்து செய்தார்.    உள்ளூர் மசூதியில் மத அதிகாரிகள் முன்னிலையில் தலாக் கூறி விவாகரத்து நடைபெற்றுள்ளது.

அப்போது ஏற்பட்ட உடன்பாட்டின் படி முகமது தன்னுடைய தாயுடன் வசிக்கலாம் எனவும் தந்தை நான்கு மாத கால கட்டத்தில் ஐந்து நாட்கள் வரை முகமது வை தனது பாதுகாப்பில் வைத்துக் கொள்ளலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.   முகமதுவின் தாத்தா பாட்டி ஆகியோர் மாதம் ஒருமுறை அவனை சந்திக்கலாம் எனவும் உடன்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

முகமதுவின் தந்தை தற்போது சவுதி அரேபியாவில் பணி புரிந்து வருகிறார்.   தாய் மென்பொறியாளராக பணி புரிவதால் தனது சகோதரியின் வீட்டில் பகல் பொழுதில் மகனை விட்டு விட்டு பணிக்கு சென்ரு விடுவார்.   அப்போது அவனது தாத்தா மற்றும் பாட்டி முகமதுவை விரும்பும் நேரத்தில் வந்து சந்தித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி அன்று முகமதுவை அவனது தாத்தா தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார்.   தாயார் எவ்வளவோ கேட்டும் அவனை திருப்பி அனுப்பவில்லை..  அதை ஒட்டி முகமதுவின் தாயார் பிப்ரவரி ஒன்றாம் தேதி காவல் துறையில் புகார் அளித்து இரண்டாம் தேதி வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.   அந்த தீர்ப்பின் ஆரம்பத்தில் ரஜினிகாந்த் நடித்த மன்னன் திரைப்படப் பாடல் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதாவது தீர்ப்பில், “மன்னன் தமிழ் திரைப்படத்தில் கே ஜே ஏசுதாஸ் பாடும்  அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே,  அம்மாவை வணங்காத உயிர் இல்லையே  என்னும் பாடலை நினைவில் கொள்ள வேண்டும்.    அதன் படி அம்மா என்பவளே குழந்தைக்கு உயிர் ஆவாள்.   அதனால் இந்தக் குழந்தை தனது தாயாரின் பாதுகாப்பில் இருக்கவேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.