திருவனந்தபுரம்
கேரள மாநில அரசு இனி பாதாளச் சாக்கடைகளை சுத்தம் செய்ய ரோபோக்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
நாடெங்கும் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்வதில் மனிதர்களே ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல இடங்களில் கையுறை கூட தருவது கிடையாது. வெறும் கைகளால் சுத்தம் செய்யும் நிலையில் அவர்கள் உள்ளனர். அத்துடன் உள்ளே இறங்கி சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்குதலால் சில நேரங்களில் மரணமும் ஏற்படுகிறது.
தற்போது கேரளாவில் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணிக்கு ரோபோக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ரோபோடிக்ஸ் நிறுவனமான ஜென்ரோபோடிக்ஸ் வடிவமைத்துள்ள இந்த ரோபோக்களைக் கொண்டு சோதனைகள் நிகழ்த்தப்பட்டன. அப்போது இந்த சோதனை வெற்றி அடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதையொட்டி இனி பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணிக்கு இத்தைகைய ரோபோக்களை உபயோகிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த சோதனையின் போது ஒரு மணி நேரத்தில் 4 பாதாளச் சாக்கடைகளை ரோபோக்கள் சுத்தம் செய்துள்ளன. இதனால் மனிதர்களுக்கு அபாயம் ஏற்படுவதை தவிர்ப்பது மட்டுமின்றி பணியும் விரைவில் முடிவடையும் என கூறப்படுகிறது.