சென்னை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை கேரளா மாநிலம் வைக்கத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் நிலையில், முல்லை பெரியாறு அணை பராமரிப்பு குறித்து அம்மாநில முதல்வரிடம் பேசுவாரா என விவசாய சங்க பிரதிநிதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
முல்லை பெரியாறு அணை பராமரிப்புக்காக சென்ற அதிகாரிகள், மற்றும் வாகனங்கள் 5 நாட்கள் காத்திருந்தும் அனுமதி ம்றுக்கப்பட்ட நிலையில், திரும்பிய நிலையில், முதல்வர் ஸ்டாலின் நாளை கேரள மாநிலம் பயணமாகிறார். கேரள மாநிலம் கோட்டயத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. அங்கு தமிழ்நாடு அரசால் புணரமைக்கப்பட்டு, பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகம் திறப்பு விழாவுக்கு அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
இதற்கிடையில், முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த 4-ந் தேதி தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் 2 லாரிகளில் தளவாடப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் வல்லக்கடவு வழியாக சென்றனர். அப்போது அங்குள்ள வனசோதனைச்சாவடியில் கேரள பெரியாறு புலிகள் காப்பக அதிகாரிகள் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினர். சுமார் 4 நாட்களாக அவர்கள் அங்கு காத்திருந்த நிலையில், கேரள அரசு அனுமதி வழங்க மறுத்த நிலையில், அவர்கள் திரும்பி வந்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணையை பராமரிக்க தமிழ்நாட்டுக்கு உரிமை உள்ள நிலையில், அதை செயல்படுத்த கேரள அரசு தொடர்ந்து பிடிவாதமாக மறுத்து வருகிறது. இந்த விஷயத்தில் திமுக அரசு, கேரள அரசிடம் நேரடியாக பேச தயங்கி வருகிறது. இதனால், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. ஏற்கனவே காவிரி பிரச்சினையும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநில அரசை கேள்வி கேட்க திராணி இல்லாத திமுக அரசு, தற்போது, கேரள மாநில அரசையும் கேள்வி கேட்க திராணியற்ற அரசாக திகழ்கிறது என விவசாய சங்க பிரதிநிதிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
அரசியலில் அண்டைய மாநிலங்களுடன் நட்பு பாராட்டும் திமுக அரசு, விவசாயிகள் விஷயத்திலும், மாநில உரிமைகளை நிலைநாட்டுவதிலும் அண்டை மாநிலங்களுடன் பேச மறுப்பு விந்தையாக இருப்பதாக சமூக ஆர்வலர்களும், விவசாய சங்க பிரதிநிதிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது குறித்து செய்தியாளர்களடம் பேசிய விவசாய சங்க பிரதிநிதிகள் , முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு விஷயத்தில் தமிழக அரசு, கேரள அரசுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் மவுனமாக உள்ளது. இதனால் அணை பராமரிப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு முல்லைப்பெரியாறு அணை பலவீனமடைந்ததாக கேரளா வாதத்தை வைக்க முடிவு செய்துள்ளது.
தமிழக முதலமைச்சர் இந்த வாரம் கேரள மாநிலம் செல்ல உள்ள நிலையில் அங்குள்ள அதிகாரிகளிடம் இது குறித்து இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னதாக, முல்லை பெரியாறு அணை பராமரிப்புக்காக சென்ற தமிழக அரசின் அதிகாரிகள், வாகனங்களை கேரள அரசு உள்ளே செல்ல அனுமதி மறுத்து விட்டது. இதனால் கடந்த 5 நாட்களாக அந்த வாகனங்கள் சோதனைச்சாவடியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழக விவசாயிகள் லோயர் கேம்ப் பகுதியில் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகளை சமாதானப்படுத்திய அதிகாரிகள் விரைவில் வாகனங்களை உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் 5 நாட்களாக அனுமதி கிடைக்காமல் தமிழக வாகனங்கள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டு இருந்தன.
மைனர் இரிகேஷன் டிபார்ட்மெண்ட் அனுமதி கடிதம் தங்களுக்கு கிடைத்தால் மட்டுமே தமிழக வாகனங்களை அனுப்ப முடியும் என்று கேரள வனத்துறையினர் பிடிவாதமாக உள்ளனர்.
இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவிக்கையில், தமிழகத்துக்கு எந்தவித நன்மையும் தராத கேரள அரசால் உருவாக்கப்பட்ட மைனர் இரிகேஷன் டிபார்ட்மெண்ட் என்ற அமைப்பை தடை செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் அனுமதியின்படி அணை பராமரிப்புக்கு அனுமதி அளிக்காவி ட்டால் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என தெரிவித்தார். ஆனால் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தியும், அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை என கூறினர்.
இந்த பரபரப்பான சூழலில், கேரள முதல்வர் கலந்துகொள்ளும் வைக்கம் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொள்ளும் வகையில் நாளை கேரள செல்கிறார். அப்போது கேரள முதல்வருடன் இதுகுறித்து பேச வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.