புதுடெல்லி:
பரிமலை ஐயப்பன் கோயிலில் நாள்தோறும் தரிசனத்துக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளித்த கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைக்கப் போராடி வரும் மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு இந்த உத்தரவு பெரும் சுமையாக அமையும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் கரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு சபரிமலை சீசனுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையில் கேரள அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதன்படி வார நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களுக்கும், வார இறுதி நாட்களில் 3 ஆயிரம் பக்தர்களுக்கும் தரிசனத்துக்கு அனுமதியளிக்கப்பட்டு வருகிறது. இதை அதிகரிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் கடந்த 18-ம் தேதி தீர்ப்பளித்த கேரள உயர் நீதிமன்றம், “நாள்தோறும் 5 ஆயிரம் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கலாம்” எனத் தெரிவித்தது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கேரள அரசு சார்பில் வழக்கறிஞர் பிரகாஷ், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “சபரிமலை ஐயப்பன் கோயில் சீசனின்போது, பக்தர்கள் அனுமதிப்பது குறித்து கேரள தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் மட்டக்குழு அமைத்து ஆலோசிக்கப்பட்டது.

தலைமைச் செயலாளர், மருத்துவக் குழுவினர் ஆகியோர் மாநிலத்தில் நிலவும் கரோனா பரவல், முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வார நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களுக்கும், வார இறுதி நாட்களில் 3 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கலாம் எனப் பரிந்துரைத்தனர்.

அதன்படி தற்போது பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, கரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் விண்ணப்பம் செய்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஜனவரி 14-ம் தேதி வரை இந்த முறையையே கடைப்பிடிக்கலாம். கரோனா பரவல் குறைந்தால், பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து தேவைக்கு ஏற்ப முடிவு எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால், நாள்தோறும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளித்து உயர் நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி அனுமதியளித்துள்ளது. எந்தவிதமான ஆய்வு அறிக்கையும் இன்றி, முறையான ஆவணங்களைப் பரிசீலிக்காமல் இந்த அனுமதி தரப்பட்டுள்ளது. அதிகமான பக்தர்களை அனுமதித்தால், காவலர்கள், மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பக்தர்கள் ஆகியோரும் கரோனாவில் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பக்தர்கள் வருகையை அதிகப்படுத்தும்போது, அவர்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்து வருகிறார்களா என்பதை சபரிமலையில் பணியில் இருக்கும் காவலர்கள் ஆய்வு செய்வதும், பக்தர்களைக் கட்டுப்படுத்துவதும் கடினமானதாக அமையும்.

பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் பெற்ற கரோனா வைரஸ் அச்சத்தால் மத்திய அரசு அனைத்து விமானங்களையும் பிரிட்டனுக்குத் தடை செய்துள்ளது. அதேபோன்ற சூழல்தான் கேரளாவிலும் ஏற்பட்டுள்ளது. ஆதலால், உடனடியாகத் தலையிட்டு, அதிகரிக்கப்பட்டுள்ள பக்தர்கள் எண்ணிக்கையைக் குறைத்து, கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.