திருவனந்தபுரம்
கேரளாவில் உள்ள அகத்தியர் கூடம் மலையில் ஏற பெண்களும் ஆன்லைனில் விண்ணப்பிக்க கேரள அரசு அனுமதித்துள்ளது.
கேரளாவில் உள்ள நெய்யார் வனவிலங்கு சரணாலயம் பகுதியில் உள்ள அகத்தியர் கூடம் மலையில் அகத்திய முனிவரின் கோவில் அமைந்துள்ளது. இந்த மலை அடர்ந்த வனப்பகுதிக்கு இடையில் அமைந்துள்ளதாகும் மேலும் இந்த மலை மிகவும் செங்குத்தானதாக உள்ளதால் ஏறிச் செல்வது மிகவும் கடினமாகும். ஆகவே பாதுகாப்புக் காரனங்களுக்காக இங்கு பெண்கள் செல்ல அனுமதிப்பது இல்லை.
இந்தப் பகுதியில் கனி எனப்படும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அகத்தியர் சிலையை பெண்கள் வழிபட இவர்கள் தடை விதித்துள்ளனர். ஆகவே இதற்கு முன்பு உடல் தகுதி பெற்ற பெண்களும் இங்குள்ள மலை உச்சியில் உள்ள கோவில் வரை செல்ல அனுமதிப்பது கிடையாது.
கேரள உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் அகத்தியர் கூடம் மலை ஏற பாலின பாகுபாடு காரணமாக தடை விதிக்கக்கூடாது என கடந்த 2018 நவம்பர் மாதம் 30ஆம் தேதி அன்று தீர்ப்பு வழஙகப்பட்டுள்ளது. அத்துடன் வரும் 2019 ஆம் வருடம் இந்த மலை ஏற அனுமதி அளிக்கும் போது அரசு பாலின பாகுபாடு காட்டி அனுமதி மறுக்கக் கூடாது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் கேரள அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் அகத்தியர் கூடம் மலை ஏற அனுமதி கோரி விண்ணப்பங்கள் அளிக்கலாம் என கூறப்ட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் 14 வயதுக்கு மேற்பட்ட மலை ஏற உடல் தகுதி உள்ள பெண்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வனப் பாதுகாப்புத் துறையின் விதிமுறைகளின் படி அகத்தியர் கூட மலையில் 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மட்டுமே அனுமதி கிடையாது என்பதால் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த மலையில் வசித்து வரும் கனி இனத்தவர் தாங்கள் நீண்ட காலமாக அங்கு வசித்து வருவதாலும் அகத்திய முனிவர் கோவில் அருகே பெண்கள் வரக்கூடாது என்பதாலும் எகளை அதிரமலை வரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கூறி உள்ளனர். அதை தாண்டி பெண்களை அனுமதிப்பது தங்கள் இன உரிமையை பறிப்பதாகும் என மனு அளித்துள்ளனர்.
சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் உச்சநீதிமன்றம் அனுமதித்ததால் தொடர்ந்த போராட்டம் இன்னும் நடந்து வருகையில் தற்போது அகத்தியர் கூடம் மலை பிரச்னையும் கேரளாவில் தொடங்கி உள்ளது.