திருவனந்தபுரம்: கேரளாவில் போக்குவரத்து விதிகளை மீறினால் விதிக்கப்படும் அபராத தொகையை அம்மாநில அரசு குறைத்துள்ளது.
நாடு முழுவதும் திருத்தப்பட்ட மோட்டார் வாகனசட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அந்த புதிய மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் 5 ஆயிரம் 60 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் அம்சங்கள் இருந்தன.
அதற்கு நாட்டின் பல தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. மக்களும், வாகன ஓட்டிகளும் அதிருப்தி தெரிவித்தனர். கடும் எதிர்ப்பை அடுத்து, பல மாநிலங்கள் அபராத குறையை குறைத்து வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாக தற்போது கேரள அரசு, அபராத தொகையை குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதன்படி, தலைக்கவசம் அணியாமலும், சீட் பெல்ட் போடாமலும் சென்றால் வசூலிக்கப்பட்டு வந்த ஆயிரம் ரூபாய் அபராத தொகை 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராத தொகை 10ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரமாக குறைக்கப்பட்டது. வேகமாக செல்லும் இலகுரக வாகனங்களுக்கு, 5 ஆயிரத்தில் இருந்து 1,500 ரூபாயும், கனரக வாகனங்களுக்கு 3 ஆயிரம் ரூபாயுமாக அபராத தொகை குறைக்கப்பட்டுள்ளது.
பந்தயம் போன்று போட்டிபோட்டுக் கொண்டும், ஆபத்தான வழியிலும் வண்டியை ஓட்டினால் விதிக்கப்படும் அபராத தொகை 10 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.