சென்னை: தமிழக எல்லையோர மாவட்டங்களில் கேரள அரசு அம்மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வருகிறது. இதன்மீது நடவடிக்கை எடுக்காமல் தமிழ்நாடு அரசு உள்ளது. இதை கண்டிப்பதாக கூறிய பாஜக மாநில தலைவர், தமிழ்நாட்டில் உள்ள குப்பைகளுடன் லாரியில் எடுத்து வந்து கேரளாவில் கொட்டுவேன் என எச்சரித்து உள்ளார்.
தமிழக எல்லையோர மாவட்டங்களில் கேரள அரசு மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவைகளை கேரள அரசு மற்றும் அம்மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் கொட்டி வருகிறது. இதை அந்த பகுதி மக்கள் அவ்வப்போது தடுத்து, திருப்பி அனுப்பி வருகின்றனர். மேலு, இது தொடர்பாக புகார்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் கேரளாவில் இருந்து நள்ளிரவு நேரங்களில் கழிவுகளை எடுத்து வந்து தமிழக எல்லையோர பகுதிகள், காடுகள், கிராமப்பகுதிகளில் கொட்டுவது தொடர்கதையாகி வருகிறது. இதனால், அந்த பகுதிகள் சுகாதார சீர்கேடு அடைந்து வருதடுன் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.
இது போன்ற குப்பைகள் தமிழ்நாட்டில் உள்ள நீர் நிலைகளில் கொட்டப்படுவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசுப்படுகிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளால் மண் வளமும் பாதிக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படும் மனித உறுப்பு கழிவுகளும் தமிழக எல்லையில் கொட்டப்படுவதால் அப்பகுதியில் காற்றை சுவாசிக்கும் மக்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் துர்நாற்றம் வீசுகிறது.
நம் மாநிலத்தை குப்பையாக்கிவிட்டு அவர்கள் மாநிலத்தை சுகாதாரத்துடன் வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் என பல முறை கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதற்கு விடிவுக்காலம் பிறப்பது எப்போது என்று சமூக ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இதன்மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்கி வருகிறது.
இந்த நிலையில், தமிழக எல்லையோர மாவட்டங்களில் கேரள மாநில அரசு குப்பைக் கொட்டுவதை தடுக்காவிட்டால் நான் குப்பை லாரியுடன் கேரளாவுக்கு சென்று , அங்கு எல்லா குப்பைகளையும் கொட்டுவோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நீர் உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை தனது கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், கேரள மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை, கேரள கம்யூனிஸ்ட் அரசின் குப்பைக் கிடங்காக மாற்றவும் அனுமதித்திருக்கிறார்.
கேரள கம்யூனிஸ்ட் அரசுடன் திமுக அரசு உறவாடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், கேரள மாநிலத்தின் பயோமெடிக்கல், பிளாஸ்டிக் மற்றும் இறைச்சிக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக நமது தென்மாவட்டங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
தினம் தினம் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் இந்தக் கழிவுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய சோதனைச் சாவடிகள், வெறும் வசூல் மையங்களாக மட்டுமே மாறிவிட்டன.
ஒருபுறம் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்துக்குச் சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் திமுக அரசு, மறுபுறம் தமிழகத்தை குப்பை கொட்டும் இடமாகப் பயன்படுத்திக்கொள்ள சுதந்திரமான அனுமதி அளித்துள்ளது.
அதிகாரிகளிடமும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் பலமுறை புகார் அளித்தும், இதனைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. முழுக்க முழுக்க திமுக அரசுக்குத் தெரிந்தே இவை நடைபெறுகின்றன.
உடனடியாக, கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதைத் திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இனியும் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், வரும் 2025 ஜனவரி முதல் வாரத்தில், பொதுமக்களைத் திரட்டி, இந்த உயிரியல் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று, கேரளாவில் கொண்டு கொட்டுவோம். முதல் லாரியில் நானும் செல்வேன் என்பதைத் திமுக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எச்சரித்துள்ளார்.