கொச்சி: கேரள மாநிலத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய மாநில அரசின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், மருத்துவமனையில் இருந்து விசாரணைக்கு அமலாக்கத்துறை அழைத்துச்சென்ற நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக அவருக்கு ஜாமின் வழங்க கேரள உயர்நீதிமன்றமும் மறுத்து விட்டது.
ஐக்கியஅரபு நாடுகளின் தூதரகம் பெயரில் வெளிநாடுகளில் தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரத்தில், பிரதான குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் (Swapna Suresh) உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்வப்பான சுரேசுடன் தொடர்பில் இருந்த கேரள மாநில முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், கடுமையான பொருளாதாரக் குற்றங்களுடன் சிவசங்கருக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து, அவரை விசாரணைக்கு அழைத்தது.
ஆனால், சிவசங்கரன் உடல்நலப் பாதிப்பு என கூறி திருவனந்தபுரத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. அதே வேளையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் வகையில் முன்ஜாமின் கோரியும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அவரது முன்ஜாமின் மனு மீதான விசாரணைக்கு சுங்கத்துறை மற்றும் அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த கடத்தல் விவகாரத்தில், அவரது பங்கு இன்னும் ஆராயப்பட்டு வருவதாகவும், அவருக்கு முன் ஜாமீன் வழங்குவது விசாரணையை மோசமாக பாதிக்கும் என்றும், விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காததால் கைது செய்து விசாரிப்பது முக்கியமானதாகி விட்டது என்றும் கூறியது இதையடுத்து அவரது முன்ஜாமின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவசங்கரனை விசாரணைக்கு அழைத்துச்சென்ற அமலாக்கத்துறை , பின்னர் திருவனந்தபுரத்தில் அமலாக்க இயக்குநரக (Enforcement Directorate) அதிகாரிகளால் தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.