திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும், கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட, முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரை 7நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் தூதரகம் மூலமாக பல கோடி மதிப்புள்ள தங்கக்கடத்தல் நடைபெற்று வந்தது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியாக இருந்து வந்த, கேரள அரசின் ஐடிதுறை அதிகாரி ஸ்வப்பான சுரேஷ் உள்பட பலர் சிக்கிய நிலையில், ஸ்வப்பான சுரேஷ்க்கு ஆதரவாக செயல்பட்டதாக, கேரள முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, அவர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு சுங்கத்துறை மற்றும் அமலாக்கத்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் உடல்நிலை சரியில்லை என கூறி மருத்துவமனையில் படுகொண்டு, சுங்க இலாகா, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமின் மனு நேற்று தள்ளுபடியான நிலையில், மருத்துவமனை சென்ற அமலாக்கத்துறையினர், சிவசங்கரனை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து, அவரை 14 காவலில் விசாரிக்க அனுமதிக்க கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு செய்தது. ஆனால், கேரள உயர்நீதிமன்றம், சிவசங்கரனை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து சிவசங்கரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படு கிறது. ஏற்கனவே அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் மாநில முதல்வர் பினராயி விஜயன் பெயரும் இடம்பெற்றுள்ளதால், சிவசங்கரன் கொடுக்கப்போகும் வாக்குமூலம் கேரள அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.