கேரள மாநிலம், ஏற்றுமானூர் மகாதேவர் கோயில்
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், ஏற்றுமானூர் என்ற இடத்தில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றியும், அதன் சிறப்புகளைப் பற்றியும் இங்கே பார்க்கலாம்
15-ம் நூற்றாண்டில் இக்கோவிலுக்கு வந்து வழிபட்ட சந்திர பாஸ்கரன் என்ற பாண்டிய மன்னன், தன் உடலில் இருந்த கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கியதை உணர்ந்தான். இதனால் இத்தல இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, இந்த ஆலயத்தைப் புதிதாகக் கட்டியதாகக் கூறப்படுகிறது. மேற்கு நோக்கிய நிலையில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் வட்ட வடிவக் கருவறையில் கரன் என்ற அசுரன் நிறுவிய சிவலிங்கம் இருக்கிறது. அகோர மூர்த்தியாகக் கருதப்படும் இவரை ‘ஏற்றுமானூரப்பன்’, ‘மகாதேவர்’ ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தில் அம்பாளுக்குச் சன்னிதி இல்லை. இருப்பினும் இறைவனின் கருவறைக்குப் பின்புறம் பார்வதி சன்னிதியாகக் கருதப்படுகிறது.
முன் மண்டபத்தில் கல்லினால் ஆன நந்தி ஒன்றும், உலோகத்தால் ஆன நந்தி ஒன்றுமாக இரண்டு நந்திகள் இருக்கின்றன. ஆலய வளாகத்தில் கணபதி, சாஸ்தா, தட்சிணாமூர்த்தி, யட்சி ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கருவறையைச் சுற்றி வரும் பாதையில் ராமாயணம் மற்றும் பாகவத புராணங்களின் கதை, மரச்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன.
ஆலயத்தின் நுழைவு வாசலில் 450 ஆண்டுகளுக்கும் மேலாக, அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும் அணையா விளக்கு ஒன்று இருக்கிறது. இதனை மலையாள மொழியில் ‘வல்லிய விளக்கு’ என்கின்றனர். இந்த அணையா விளக்கு இங்கு அமைந்திருப்பதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.
ஒரு பெரியவர், பெரிய தூக்கு விளக்குடன் இந்தக் கோவிலுக்கு வந்தார். “நான் பல நாட்களாகப் பட்டினியாக இருக்கிறேன். இந்த விளக்கை வைத்துக் கொண்டு, எனக்கு யாராவது பணம் கொடுங்கள்” என்று இறைஞ்சினார். அங்கிருந்த சிலர், “பணம் கொடுத்து விளக்கு வாங்கும் நிலை ஏற்றுமானூரப்பனுக்கு இல்லை” என்று கூறி அவரை கேலி செய்தனர். உடனே அந்தப் பெரியவர், ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனிடம் “இறைவா, என்னைக் காப்பாற்று” என்று கண்ணீர் மல்க வேண்டி நின்றார்.
இந்த நிலையில் அந்தப் பகுதியில் திடீரென்று சூறாவளிக் காற்றுடன் இடியும் சேர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. அப்போது அங்கு வந்த ஒருவர், அந்தப் பெரியவர் கொண்டு வந்த விளக்கைப் பலிக்கல் அருகேத் தூக்கிக் காட்டினார். உடனே சூறாவளியுடன் கூடிய இடி-மழை நின்று போனது. விளக்கை கையில் வைத்திருந்தவரும் திடீரென்று மறைந்து போனார். அப்போதுதான், பெரியவரை கேலி செய்தவர்களுக்குப் பாடம் புகட்டுவதற்காக இறைவனே விளக்கே ஏந்தி வந்தது தெரியவந்தது. இறைவனே கையில் ஏந்தி வந்ததால், இந்த விளக்கு இன்று வரை அணையாமல் எரிந்து கொண்டிருப்பதாகச் செவி வழிக்கச் சொல்லப்படுகிறது.
இறைவன் சிவபெருமான், பார்வதி தேவியைக் கயிலாயத்திலேயே விட்டு விட்டு ஏற்றுமானூர் சென்றுவிட்டார். இதனால் கவலை அடைந்த பார்வதி தேவி, பூதகணங்கள், கணபதி, சாஸ்தா உள்ளிட்ட சிலருடன் கயிலாயத்தில் இருந்து ஏற்றுமானூருக்கு புறப்பட்டாள். தான் இருக்கும் இடம் தேடி வந்த பார்வதியைக் கண்டு இறைவன் மகிழ்ச்சியடைந்தார். அவர்களை வரவேற்கும் விதமாக ஒரு விளக்கை ஏந்தி வரவேற்றார். இறைவனிடம் இருந்து அந்த விளக்கைப் பெற்ற பார்வதி, அதை தூண்டி விட்டு அதன் ஒளியை அதிகரித்தாள். மேலும் அந்த விளக்கில் படிந்திருந்த கருப்பு நிறச் சாம்பலை எடுத்து தனது இரு கண்களையும் அழகுபடுத்திக் கொண்டாள். அந்த விளக்கே இன்றளவும் அணையாமல் எரிந்து கொண்டிருப்பதாக மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது.
திருவாங்கூர் மன்னராக இருந்த அனுசம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்பவர், தங்கத்தால் தகடுகள் பொருத்தப்பட்ட எட்டு யானை சிலைகள் செய்ததாகச் சொல்லப்படுகிறது. அவருக்குப் பின் வந்த கார்த்திகை திருநாள் என்பவர், அந்த யானைகளை இந்த ஆலயத்திற்கு வழங்கியிருக்கிறார். இவற்றில் 7 யானைகள் இரண்டரை அடி உயரம் கொண்டவை. எட்டாவது யானை இவற்றில் பாதியளவுடையது. எனவே, இவற்றை ‘ஏழரைத் தங்க யானைகள்’ என்று பொருள் தரும் வகையில் மலையாளத்தில் ‘ஏழரைப்பொன் ஆனா’ என்கிறார்கள்.
சீமைப் பலா மரத்தால் செய்யப்பட்ட இந்த யானை சிலைகள், 13 கிலோ தங்கத் தகடுகளைக் கொண்டு தங்க யானைகளாக மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. ஏற்றுமானூர் கோவிலில் நடைபெறும் ஆறாட்டு விழாக் காலத்தில், எட்டு மற்றும் பத்தாம் நாட்களில் இந்த ஏழரை யானைகளும் கோவில் பாதுகாப்பறையில் இருந்து வெளியே எடுக்கப்படும். சிறிய தங்க யானையில் இறைவன் அமர்ந்திருக்க, மற்ற ஏழு தங்க யானைகளுடன் ஊர்வலம் வருவதுபோன்ற காட்சி, பொதுமக்கள் பார்வைக்காகவும், வழிபாட்டுக்காகவும் கோவிலில் வைக்கப்படுகிறது.
இந்தக் கோவில் தினமும் அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
கேரள மாநிலம் கோட்டயம் நகரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், வைக்கம் நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது, ஏற்றுமானூர் மகாதேவர் கோவில். கோட்டயம், வைக்கம் ஆகிய ஊர்களில் இருந்து அதிகமான பேருந்து வசதிகள் உள்ளன.