திருவனந்தபுரம்
மகப்பேறு நல விதிகளின் கீழ் தனியார்ப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
தாய்மை அடைந்துள்ள பெண் ஊழியர்கள் நலனுக்காக மகப்பேறு நல விதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளின்படி குழந்தை பிறப்பதற்கு முன்பும் பின்னும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு சில சலுகைகளை அனைத்து நிறுவனங்களும் வழங்க வேண்டும். இதில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை உள்ளிட்ட பல அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி கேரள அரசு அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. அப்போது இந்த மகப்பேறு நல விதிகளின் கீழ் தனியார்ப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணி புரியும் பெண்களையும் கொண்டு வர வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மத்திய அரசின் அனுமதியைக் கேரள அமைச்சகம் கேட்டிருந்தது.
தற்போது மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் விரைவில் இந்த தீர்மானம் அமல்படுத்தப்படும் எனவும் கேரள தொழிலாளர் நல அமைச்சர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவர், “பெண் தொழிலாளர் நலனுக்காகக் கேரள அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாகக் கடைகளில் பணி புரியும் பெண்கள் வேலை நேரத்தில் உட்கார அனுமதி அளித்துள்ளது.
இதைத் தவிர தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு அளிக்கப்படுகிறது. மத்திய அரசு குறைந்த பட்ச தினசரி ஊதியமாக ரூ.150 அளித்துள்ள வேளையில் அதைக் கேரள அரசு ரூ.600 ஆக நிர்ணயம் செய்துள்ளது. அவ்வகையில் தற்போது தனியார்ப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணி புரியும் பெண்கள் மகப்பேறு நல விதிகளின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்தியாவில் இவ்வாறு நடப்பது இதுவே முதல் முறையாகும்” எனக் கூறி உள்ளார்.