டெல்லி: கேரளா, டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 7 வாரங்களில் தினமும் பதிவாகும் சராசரி கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. பலி எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
செப்டம்பர் 16 முதல் 22ம் தேதி வரையிலான காலகட்டத்தில் பதிவான சராசரி கொரோனா பாதிப்பு 90,346 ஆகும். அதுவே, அக்டோபர் 28 – நவம்பர் 3 இடையில் சராசரியாக 45,884 கொரோனா தொற்றுகள் மட்டுமே பதிவாகி உள்ளன.
செப்டம்பர் 16 மற்றும் செப்டம்பர் 22 இடையிலான காலகட்டத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1,165 பேர் பலியாகினர். அக்டோபர் 28 – நவம்பர் 3 இடையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 513 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் தயவுசெய்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். லட்சக்கணக்கான சோதனைகளை மேற்கொள்ள எங்களுக்கு வசதிகள் உள்ளன. கடந்த 8 முதல் 10 நாட்களில் நீங்கள் தொடர்பு கொண்டவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.