திருவனந்தபுரம்: கேரளா உள்ளாட்சி தேர்தலில் 3வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. முதல்வர் பினராயி விஜயன் அவரது சொந்த ஊரான கன்னூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே முதல் மற்றும் 2வது கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இன்று 3வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் விறுவிறுப்பாகன வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது சொந்த ஊரான கன்னூர் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.
பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 10 ஆயிரத்து 642 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்பதற்காக கோடுகளும் வரையப்பட்டு உள்ளன. மற்றும் கொரோனா கட்டுப்பாடு விதிகள் முறையாக பின்பற்றப்படும் என்றும் வாக்காளர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 16ந்தேதி அன்று நடைபெற உள்ளது.